Monday, September 7, 2009

2008ல் உலகிலேயே அதிக அளவில் ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா

உலகப் பொருளாதாரம் ஒடிந்து போன நிலையிலும் கூட அமெரிக்காவின ஆயுத விற்பனையில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2008ம் ஆண்டு அமெரிக்கா மொத்தம் 30.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த மொத்த ஆயுத விற்பனையின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அளவில் நடந்த ஆயுத விற்பனையில் மூன்றில் 2 பங்கை அமெரிக்கா மட்டும் மேற்கொண்டுள்ளது.

தனது வழக்கமான கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிடம் பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா போன்ற சில நாடுகளுக்கும் கூட பெருமளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனையில் மண்ணையும் அள்ளிப் போட்டுள்ளதாம் அமெரிக்கா.

வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய ஆயுதங்களை வழங்குதல் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்தான் இந்த விவரங்கள் உள்ளன. இதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவிடமிருந்து பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்து நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். எமிரேட்ஸுக்கு 6.5 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியுள்ளது அமெரிக்கா.

அதேபோல மொராக்கோ நாட்டுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்களை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தைவானுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கவும் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.

இவர்கள் தவிர இந்தியா , ஈராக், சவூதி அரேபியா, எகிப்து, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பெருமளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment