விரும்பினால் மட்டுமே சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வை மாணவர்கள் எழுதும் முறை 2010-11 கல்வியாண்டில் அமலாக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதன்மூலம் அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
அவர் அளித்த பேட்டி:
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு அடுத்த கல்வியாண்டு (2010-2011) முதல் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால், வேறு பள்ளிகளுக்கு மாறிச்செல்லும் மாணவர்கள் மற்றும் பியுசி படிப்புகளில் சேரும் மாணவர்கள் விரும்பினால் 10ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொள்ளலாம். அதே பள்ளியில் தொடர்ந்து 11ம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுத வேண்டியதில்லை. அவர்களும் விருப்பப்பட்டால் எழுதலாம்.
அதே நேரத்தில் நடப்புக் கல்வியாண்டிலே மதிப்பெண்ணுக்கு பதிலாக 'கிரேடிங்' முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
'கிரேடிங்' வகைகள்:
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்டையில் 9 வகையான கிரெடுகள் வழங்கப்படும். அதன் விவரம்:
ஏ1 (91 முதல் 100 மார்க்-தனிச்சிறப்பு தகுதி)
ஏ2 (81 முதல் 90 மார்க்- சிறப்பு தகுதி)
பி1 (71 முதல் 80 மார்க்-மிக நன்று)
பி2 (61 முதல் 70 மார்க்-நன்று)
சி1 (51 முதல் 60 மார்க்-பரவாயில்லை)
சி2 (41 முதல் 50 மார்க்- சராசரி)
டி (33 முதல் 40 மார்க்-சராசரிக்கும் குறைவு)
இ1 (21 முதல் 32 மார்க்-முன்னேற்றத்தில் கவனம் தேவை)
இ2 (00 முதல் 20 மார்க்-திருப்தி இல்லை)
இந்த `கிரேடு' முறையை சிபிஎஸ்இ. வாரியத்தின் தலைவர் வினீத் ஜோஷி தலைமையிலான உயர் மட்ட கமிட்டி நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, மாணவர்கள் சிபிஎஸ்இ படிப்பில் தேர்வு பெற்றதற்கான சான்றிதழ் பெற 33 மதிப்பெண் (டி கிரேடு) பெற வேண்டியது கட்டாயம் ஆகும் என்றார் கபில்.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடரும்:
இந் நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வை ரத்து செய்து நீக்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. முறைப்படியான அறிவிக்கை வந்தால் மட்டுமே இது பற்றி ஆய்வு செய்யப்படும்.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பழைய நிலையிலேயே நீடிக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நீக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டால், கல்வியாளர்களுடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்.
சமச்சீர் கல்விக்கு மெட்ரிக் பள்ளிச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது.
சமச்சீர் கல்விக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், குறைகள் இருப்பதாக கருதினால், அவர்கள் தமிழக அரசை தயங்காமல் அணுகலாம். அவர்களுக்கு எல்லாவித விளக்கமும் தர நாங்கள் தயாராக உள்ளோம்.
சமச்சீர் கல்வி காரணமாக மாணவ சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு முற்றிலுமாக களையப்படும். சமூக நீதிக்கு வழி வகுக்கும். எனவேதான் முதல்வர் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு வந்துள்ளார் என்றார்.
No comments:
Post a Comment